Tuesday, 10 March 2015

அப்பா

"ஆ" என அலறும்போது 
"அம்மா" வை அழைப்பதுபோல்...
நிம்மதிப் பெருமூச்சில் 
நித்தம் சொல்லும் வார்த்தை "அப்ப்பா"!

நாம் நிம்மதியாய் வாழ்வதற்காய்
நித்தம் நித்தம் உழைத்ததற்காய்...
நம் நிம்மதிப் பெருமூச்சில் 
நித்தம் சொல்லும் வார்த்தைதானோ "அப்ப்பா" !

வெயிலில் நடந்த நான் 
நிழல் தேடி ஒதுங்கும்போதும்...
கால்கடுக்க நின்ற நான்
காலாற அமரும்போதும்...
தண்ணீர் தாகம் தீர்க்கும்போதும், 
பசிதீர்த்து உறங்கும்போதும்... 
இத்தனைபோல் அத்தனைக்கும் 
என் நிம்மதிப் பெருமூச்சில் 
நித்தம் வரும் வார்த்தையது "அப்பா" !

ஏன் இப்படி? என்னுள் கேட்கிறேன்!

கூடையில் காய்கறியும்... சந்தையில் மீனும்...
தனக்குப் பிடித்ததை வாங்காமல்
நமக்குப் பிடித்ததை வாங்கிவந்த "அப்பா" !

சாப்பாட்டினைப் பிசையும் முன்னே
சதா கேட்கும் வார்த்தை
பிள்ளைகளுக்கு இருக்கா?
அதுதான் "அப்பா"!

இதோ... வெளிநாடுகளில்
இல்லறம் மறந்து, உற்றம் சுற்றம் துறந்து
தான் பெற்ற மக்களுக்காய்
தன் வாழ்வினையே தொலைக்கும் 
என் அண்ணன் தம்பிகள்தான் "அப்பா"!

அப்பா என்றால் தியாகம்!
அப்பா என்றால் தைரியம்!
அப்பா என்றால் நண்பன்!
அப்பா என்றால் முன்னோடி!

ஆம், 
உள்ளுக்குள் வலியோடு 
வெளியில் நமக்காய் சிரித்தவர்!
நமக்கு வலியெனில் 
தனக்குள் அழுதவர்!

அளவற்ற நேசத்தினைப் 
பூட்டிவைத்துக் கொண்டு 
பொய்க்கோபம் காட்டியவர்!

நாம் விழிக்கும்போது அவர் வேலைக்கும்
நாம் தூங்கியபின்பு அவர் வீட்டிற்குமாய்...
நாம் தூங்கும்போது மட்டுமே 
நம்மிடம் பாசம் காட்டிய உழைப்பாளி!

தனக்கென்று சிந்தித்ததுமில்லை...
சேர்த்து வைத்ததுமில்லை...!
எல்லாமே நமக்காக!

அம்மாவிடம் பேசும்போது
நெகிழ்ந்து பேசும் நம் மனசு..
அப்பாவிடம் பேசும்போது
நம் குரல்கூட நிமிர்ந்து பேசும்!

எதிரில் வருவது சிங்கமே என்றாலும்
எதற்கும் அஞ்சமாட்டேன்...
எனதருகில் என் அப்பா!

உயரே தூக்கிப் போட்டுப் பிடித்தபோது
நாம் உற்றுநோக்கிச் சிரித்த முகம் "அப்பா" !

உன்னத உறக்கத்தை
உணர்வோடு கொடுத்த நெஞ்சம்.. "அப்பா"!

நமக்கு உயிரை மட்டுமல்ல..
தாய், தமக்கை, தமையன் என
உறவுகளையும் கொடுத்த தெய்வம் "அப்பா"!

சைக்கிளோட்ட மட்டுமல்ல...
வாழ்வின் வித்தைகளையும் கற்றுக்கொடுத்தவர்!

நாம் நிம்மதியாய் வாழ்வதற்காய்
நித்தம் நித்தம் உழைத்ததற்காய்...
நிம்மதிப் பெருமூச்சில் 
நித்தம் சொல்லும் வார்த்தை "அப்பா"!

மக்கள் மன்றம்.

0 comments:

Post a Comment